செப்டம்பரில் நிறைய நாட்கள் வங்கி விடுமுறை..! 2000 ரூபாய் நோட்டுகளை சீக்கிரமா மாத்துங்க..!

ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வங்கி கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.;

Update: 2023-09-01 08:29 GMT

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் வெளியிட்டது. 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வங்கி கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

கிட்டத்தட்ட 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டும், பலர் இன்னும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர். 

கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி மக்களவையில் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.

எனவே, மீதமுள்ள நோட்டுகள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் திரும்ப பெறப்பட வேண்டும். இன்னும் ஒரு மாதம் இருந்தாலும் வங்கி விடுமுறை நாட்கள் அதிகமாக இருப்பதால் எவ்வளவு சீக்கிரம் வங்கிகளுக்கு சென்று 2000 ரூபாயை மாற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்றிக்கொள்வது நல்லது.

இதுவரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் வைத்திருப்போர், சம்பந்தப்பட்ட வங்கிக்கு செல்வதற்கு முன் வங்கி விடுமுறை நாட்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தேசிய மற்றும் மாநில பொது விடுமுறை நாட்கள் என செப்டம்பர் மாதத்தில் 16 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. 

Tags:    

மேலும் செய்திகள்