விராஜ்பேட்டையில் கடந்த 10 நாட்களாக தொடர் அட்டகாசம் செய்து வந்த புலி பிடிபட்டது
விராஜ்பேட்டையில் கடந்த 10 நாட்களாக தொடர் அட்டகாசம் செய்து வந்த புலி பிடிபட்டது. கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குடகு;
புலி அட்டகாசம்
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவை அடுத்த மால்தாரே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் காட்டுயானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக புலி ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி மால்தாரே கிராமத்துக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது.
அந்த புலி ஆடு, மாடுகளை வேட்டையாடி கொன்றதுடன், மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்தனர். மேலும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
கும்கி யானைகள் வரவழைப்பு
அதன்படி வனத்துறையினர் புலியை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அந்தப்பகுதியில் இரும்பு கூண்டுகளை வைத்தனர். ஆனாலும், இரும்பு கூண்டில் புலி சிக்காமல் வனத்துறையினருக்கு தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.
இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் புலியை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி கும்கி யானைகளான இந்திரா, அர்ஜூனா, லட்சுமணா, ஈஸ்வரா ஆகிய 4 யானைகள் மால்தாரே பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
புலி பிடிபட்டது
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த புலி மால்தாரே அருகே ஒசஹள்ளி கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தில் பதுங்கி இருப்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து கும்கிகள் உதவியுடன் அங்கு சென்ற வனத்துறையினர், கால்நடை மருத்துவர் உதவியுடன் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தினர். புலி மீது மயக்க ஊசி பாய்ந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் புலி மயங்கி விழுந்தது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த புலியை வனத்துறையினர் பிடித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அந்த புலியை கூண்டுக்குள் அடைத்து அங்கிருந்து கொண்டு சென்றனர். மேலும் அந்த புலி காயம் அடைந்திருந்தது தெரியவந்தது. இதனால் அந்த புலிக்கு மைசூருவில் உள்ள கால்நடை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் மகிழ்ச்சி
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், பிடிபட்டது 13 வயது நிரம்பிய ஆண் புலி ஆகும். அந்த புலிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ைமசூருவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புலியின் உடல் நிலை சரியானதும் வனப்பகுதிக்குள் கொண்டு விடப்படும் என்றார்.
தொடர் அட்டகாசம் செய்து வந்த புலி பிடிபட்டதால் மால்தாரே மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.