கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல் நல பிரச்சினைகள் ஏற்படுமா..? ஆய்வில் அடுத்த அதிர்ச்சி
கோவிஷீல்டை போல கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல் நல பிரச்சினைகள் ஏற்படுகிறதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.;
புதுடெல்லி,
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றி உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன.
இதில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் பிரதானமானவை. இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசியை புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து நாடு முழுவதும் வழங்கியது. அதேநேரம் கோவேக்சின் தடுப்பூசி இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது ஆகும். பாரத் பயொடெக் நிறுவனம் தயாரித்து வழங்கிய இந்த தடுப்பூசி இந்தியாவின் தற்சார்பு வலிமையை பறைசாற்றியது.
உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய கோவிஷீல்டு
இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல், ரத்த தட்டுகளின் எண்ணிக்கை சரிவு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் சமீபத்தில் இங்கிலாந்து கோர்ட்டில் தெரிவித்தது. அத்துடன் சந்தைகளில் இருந்தும் அந்த தடுப்பூசி திரும்பப்பெறப்பட்டது. அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கோவேக்சின்
இந்த அதிர்ச்சி மறைவதற்குள், கோவேக்சின் தடுப்பூசியும் பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.
இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட 926 பேரை கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023 ஆகஸ்டு வரை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வந்தனர். இதில் 635 பேர் இளம் பருவத்தினரும், 296 பேர் நடுத்தர வயதினரும் ஆவர்.
இந்த ஆய்வில் சுமார் 3-ல் ஒரு பங்கினருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் பாதியளவு பேருக்கு சுவாசக்கோளாறு உள்ளிட்ட தொற்றுகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகள் ஒரு சதவீத நபர்களிடம் பதிவாகியுள்ளது.
இளம்பருவத்தினரிடம் தோல் மற்றும் தோலடி நோய்கள் (10.5 சதவீதம்), பொதுவான நோய்கள் (10.2 சதவீதம்) மற்றும் நரம்பு மண்டலக் கோளாறுகள் (4.7 சதவீதம்) போன்றவை பொதுவான கோளாறுகளாக உள்ளன. பெரியவர்களிடமும் பொதுவான கோளாறுகள் (8.9 சதவீதம்), தசைக்கூட்டு கோளாறுகள் (5.8 சதவீதம்), நரம்பு மண்டல கோளாறுகள் (5.5 சதவீதம்) போன்றவை பொதுவான பக்க விளைவுகளாக காணப்படுகின்றன. பெண்களிடம் சீரற்ற மாதவிலக்கு (4.6 சதவீதம்) உள்ளிட்ட பிரச்சினைகள் பொதுவாக காணப்படுகின்றன.
இதற்கிடையே தடுப்பூசி போட்டவர்களில் 4 மரணங்கள் (3 பெண்கள், ஒரு ஆண்) பதிவாகி இருக்கிறது. இந்த 4 பேரும் நீரிழிவு நோயாளிகள் ஆவர். 3 பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 2 பேருக்கு தடுப்பூசிக்கு முன்பு கொரோனா தாக்குதலும் இருந்துள்ளது.
பெண்கள், தடுப்பூசிக்கு முந்தைய கொரோனா தாக்குதல் பெற்ற இளம் பருவத்தினர், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசிக்குப் பிந்தைய டைபாய்டு உள்ளவர்களிடம் முறையே 1.6, 2, 2.7 மற்றும் 3.2 மடங்கு அதிகமான பக்க விளைவுகள் காணப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் ஸ்பிரிங்கர் நேச்சர் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது. கோவிஷீல்டை போல கோவேக்சின் தடுப்பூசியும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்ற தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.