போலி பட்டா தயாரித்து நிலம் மோசடி: சிக்கமகளூரு நகரசபை பெண் ஊழியர் உள்பட 2 பேர் இடைநீக்கம்

போலி பட்டா தயாரித்து நிலத்தை மோசடி செய்த வழக்கில் சிக்கமகளூரு நகரசபை பெண் ஊழியர் உள்பட 2 பேரை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2023-06-09 18:45 GMT

சிக்கமகளூரு-

போலி பட்டா தயாரித்து நிலத்தை மோசடி செய்த வழக்கில் சிக்கமகளூரு நகரசபை பெண் ஊழியர் உள்பட 2 பேரை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

2 பேர் பணி இடைநீக்கம்

சிக்கமகளூரு நகரசபையில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தவர்கள் ஆஷா, மகாதேவ். இவர்கள் சிக்கமகளூரு அருகே இந்தாவரா கிராம பஞ்சாயத்து எல்லையில் உள்ள நிலத்தை போலியாக பட்டா தயாரித்து மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து கலெக்டர் ரமேசிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டார்.

அதன்படி அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், ஊழியர்கள் ஆஷா மற்றும் மகாதேவ், இந்தாவாரா கிராமத்தில் உள்ள நிலத்துக்கு போலி பட்டா தயாரித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டார்.

40 ஆயிரம் வீடுகள்

இதுகுறித்து கலெக்டர் ரமேஷ் கூறுகையில், சிக்கமகளூரு நகரசபையில் ஊழியர்களாக பணியாற்றி வரும் ஆஷா மற்றும் மகாதேவ் ஆகியோா் போலி பட்டா தயாரித்து நிலத்தை மோசடி செய்துள்ளனர். இதனால் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், நகரசபையில் பணியாற்றும் ரமேஷ், பிரபாகர், சிவானந்த், மமதா, பசவராஜ் ஆகிய 5 பேர் மீதும் முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிக்கமகளூருவில் ஆயிரம் ஏக்கரில் 40 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்க நிலங்களை ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்கள், தாலுகா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் வீடு என்ற வகையில் மாநில அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விரைவில் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்