கடூரில் தாயை கொன்ற தொழிலாளி கைது

கடூர் தாலுகாவில் மதுகுடிக்க பணம் தராததால் தாயை கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-02 18:45 GMT

சிக்கமகளூரு-

கடூர் தாலுகாவில் மதுகுடிக்க பணம் தராததால் தாயை கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பிதரே கிராமத்தை சேர்ந்தவர் கமலம்மா (வயது56). இவர் மகன் சந்தோஷ் (29). இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில், சந்தோஷ் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வரும் சந்தோஷ் அடிக்கடி கமலம்மாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் குடிப்பதற்கு பணமும் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் அவர்கள் இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தோஷ் மதுகுடித்து வீட்டிற்கு வந்தார். அப்போது கமலம்மாவிடம் மீண்டும் மதுகுடிக்க பணம் வேண்டும் என அவர் கூறினார். இதனால் அவர்கள் 2 பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

சமாதானம்

இதில், அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கமலம்மாவின் வீட்டிற்கு வந்தனர். பின்னர் சந்தோஷ், கமலம்மாவை அவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சமாதானம் அடைந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை மதுகுடித்து வீட்டிற்கு வந்த சந்தோஷ் கமலம்மாவிடம் தகராறு செய்தார். அப்போது மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என கமலம்மா கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த சந்தோஷ் அருகில் கிடந்த பிளேடால் கமலம்மாவை கை, கால் உள்பட பல்வேறு இடங்களில் அறுத்தார். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கமலம்மா சரிந்து விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கமலம்மா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை தேடி வந்தனர். இந்தநிலையில் பிதரே கிராமத்தில் பதுங்கி இருந்த சந்தோசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கடூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுகுடிக்க பணம் தராததால் தாயை தொழிலாளி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்