குப்பத்தை சேர்ந்தவர் கைது; கூட்டாளிகளுக்கு வலைவீச்சு
ஆந்திர நபர் கொலை வழக்கில் குப்பத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோலார் தங்கவயல்:
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா கேசம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கேசம்பள்ளி-மடிவாளா கிராமங்களுக்கு இடையில் உள்ள கால்வாயில் கடந்த 15-ந் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அறிந்த கேசம்பள்ளி போலீசார் விரைந்து சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து கொலையானவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கொலையானவர் ஆந்திர மாநில குப்பம் தாலுகா பெள்ளகோகிலி கிராமத்தைச் சேர்ந்த சங்கரப்பா என்பது தெரியவந்தது.
பின்னர் கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கேசம்பள்ளி மற்றும் மடிவாளா கிராம பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொருத்தி உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் இக்கொலை வழக்கில் ஆந்திர மாநிலம் குப்பம் தாலுகா அனிகெரே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரின் கூட்டாளிகளையும் போலீசார் தேடிவருகிறார்கள்.