நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-03 18:45 GMT

மண்டியா:

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 5,811 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று காலை வினாடிக்கு 11,800 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டி உள்ளது.

124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று காலை நிலவரப்படி 99.50 அடி தண்ணீர் உள்ளது. நேற்று முன்தினம் 98.40 அடி தண்ணீர் இருந்தது. இதனால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் அணையின் நீர்மட்டம் 123.76 அடியாக இருந்தது.

இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2,183 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று அது, வினாடிக்கு 1,592 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதால் கவலையில் இருந்து வந்த விவசாயிகள், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் கபினி அணை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,275.70 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5,481 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 8,245 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2,592 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காவிரியில் 3,183 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று அது குறைக்கப்பட்டு வினாடிக்கு 2,592 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்