கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் வந்தது

4 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-03-24 18:45 GMT

மைசூரு:

4 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணை

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராமநகர், சாம்ராஜ்நகர் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக கே.ஆர்.எஸ். அணை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக சீரான அளவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறையாமல் இருந்தது.

தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதாலும், மக்களின் தண்ணீர் தேவைக்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக நேற்று 100 அடிக்கு கீழ் குறைந்தது.

கடினம்

4 வருடங்களுக்கு பிறகு மார்ச் மாதம் 3-வது வாரத்திலேயே கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் வந்துள்ளதால் நீர்ப்பாசன துறை அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். 'இன்னும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை வெயில் அதிகமாக இருக்கும். அந்த காலக்கட்டத்தில் மக்களின் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். கடந்த மாதம்(பிப்ரவரி) 109 அடியாக இருந்த கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் தற்போது ஒரே மாதத்தில் 9 அடி குறைந்துள்ளது. தற்போதுள்ள தண்ணீரைக் கொண்டு ஜூன் மாதம் வரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம். ஆனால் மே மாதம் விவசாயத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது கடினம்.

மழை பெய்யாவிட்டால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் பிரச்சினை இருக்காது' என்று அதிகாரிகள் கூறினர்.

கபினி அணை

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 271 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தண்ணீர் தேவைக்காக வினாடிக்கு 1,409 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் கபினி அணையின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 2,284.80 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,260 அடியாக இருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 85 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் கால்வாயில் திறந்து விடப்பட்டு இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்