கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு முக்கிய உத்தரவு
மசூதியை ஆய்வுசெய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்கக்கோரி முஸ்லிம்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோவில் இருக்கும் பகுதியில்தான் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படுகிறது. அதன் அடையாளமாகவே கிருஷ்ண ஜென்மபூமி கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்ததாகவும், ஆனால் கோவிலின் சில பகுதிகளை இடித்துவிட்டு ஷாஹி ஈத்கா மசூதியை கடந்த 1669 - 70ம் ஆண்டில் அப்போதைய முகலாய மன்னர் அவுரங்கசீப் தலைமையில் கட்டப்பட்டது எனவும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ச்சியாக கூறி வருகின்றன.
இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், கடந்த, 1968ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் ஷாஹி மஸ்ஜித் இத்கா அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில், 10.9 ஏக்கர் நிலம் கோவிலுக்கும், மீதமுள்ள, 2.5 ஏக்கர் நிலம் மசூதிக்கும் பிரிக்கப்பட்டன. ஆனால், இந்த பிரிவு ஏற்கத்தக்கதல்ல எனவும், மொத்த நிலமும் கிருஷ்ண ஜென்மபூமிக்கு சொந்தமானதுதான் என்றும் இந்துத்துவ அமைப்புகள் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
மதுரா நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகள், அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. மசூதி இடத்தில் களஆய்வு செய்வதற்கு உத்தரவிடக் கோரி, இந்துக்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த மதுரா நீதிமன்றம், அதற்கு அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து முஸ்லிம்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடின. ஆனால் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.
இதன் பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கிருஷ்ண ஜென்ம பூமியை ஒட்டிய ஷாஹி ஈத்கா மசூதியை ஆய்வு செய்ய ஆணையம் அமைத்து பிறப்பித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை மசூதியில் ஆய்வு செய்ய தடை விதிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.