மாநிலங்களவை தேர்தல் விவகாரம்: பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு
மாநிலங்களவை தேர்தலையொட்டி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.;
பெங்களூரு: மாநிலங்களவை தேர்தலையொட்டி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
கர்நாடகத்தில் காலியாகும் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டில் தலைமை தாங்கினார்கள்.
கூட்டத்தில் மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 3 வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டத்துறை மந்திரி மாதுசாமி, முன்னாள் மந்திரி சுரேஷ்குமார் வாக்களிப்பது பற்றி தெரிவித்தார்கள்.
கொறடா உத்தரவு
குறிப்பாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு வாக்களிக்கும் 45 எம்.எல்.ஏ.க்கள், அதுபோல் நடிகர் ஜக்கேசுக்கு வாக்களிக்க வேண்டிய 45 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் லெகர் சிங்குக்கு வாக்களிக்க வேண்டிய 32 எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மாநிலங்களவை தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதை கவனிக்க தனியாக ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த ஏஜெண்டுகளிடம் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்கான தகவலை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
அதே நேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு மட்டுமே ஓட்டு போட வேண்டும் என்றும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சபாநாயகர் காகேரிக்கு பொருந்தாது என்று கொறடா உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.