கொல்கத்தா பலாத்கார வழக்கு; முன்னாள் முதல்வருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு

சி.பி.ஐ. அமைப்பு கடந்த 4 நாட்களில், பெண் டாக்டரின் மரணத்திற்கு பின்னர் சந்தீப் கோஷின் நடவடிக்கைகள் பற்றி அவரிடம் 53 மணிநேரம் விசாரணை நடத்தி உள்ளது.;

Update: 2024-08-20 08:29 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். 23-ந்தேதி வரை அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் பெண் டாக்டரின் பெற்றோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில், ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்க கூடும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றிய, முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு எதிராக கொல்கத்தா போலீசார் ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்து உள்ளனர்.

இந்த அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் நிதி முறைகேடுகள் பற்றி கடந்த ஜூனில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 2021-ம் ஆண்டில் இருந்து இந்த அரசு மருத்துவமனை மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை பற்றி அரசு, சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரித்தது.

இந்த குழு, கோஷின் பதவி காலத்தில் நடந்த நிதி முறைகேடுகளை விசாரித்து வருகிறது. பெண் டாக்டர் படுகொலை சம்பவத்திற்கு பின்னர் 2 நாட்களில் முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகினார். எனினும், வேறு ஒரு மையத்திற்கு அவர் பணியமர்த்தப்பட்டது சர்ச்சையை எழுப்பியது.

கொல்கத்தா தேசிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வராக சந்தீப் கோஷ் பணியமர்த்தப்பட்டார். இந்த சூழலில், அடுத்த உத்தரவு வரும் வரை சந்தீப்பை வேறு எந்த மருத்துவ கல்லூரியிலும் பணி நியமனம் செய்ய கூடாது என சுகாதார துறைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு கூறியது.

இதனால், அவர் பதவி விலகியபோதும் அவரை சுற்றி சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. பெண் டாக்டரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிப்பதில் தாமதம், சம்பவம் நடந்த பகுதியருகே புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வது என்ற அவருடைய முடிவுகள் ஆகியவை கேள்விகளை எழுப்பியுள்ளன.

இந்த விவகாரத்தில், சி.பி.ஐ.யின் விசாரணை வட்டத்திற்குள் உள்ள சந்தீப் கோஷ், கடந்த 4 நாட்களில், பெண் டாக்டரின் மரணத்திற்கு பின்னர் அவருடைய நடவடிக்கைகள் பற்றி 53 மணிநேரம் விசாரணை நடத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்