பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் விவசாய பிரிவு கடிதம்; வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு துரோகம் செய்து விட்டதாக கிசான் காங்கிரசின் தலைவர் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் கடிதம் எழுதி உள்ளார். அதில், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு துரோகம் செய்து விட்டதாக கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு காங்கிரசின் விவசாய பிரிவான அகில இந்திய கிசான் காங்கிரசின் தலைவர் சுக்பால்சிங் கெய்ரா ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக கடந்த ஆண்டு நீங்கள் (பிரதமர் மோடி) அறிவித்தீர்கள். அதைத்தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றார்கள். போராட்டத்தை வாபஸ் பெற்று ஓராண்டு ஆகிவிட்டது.
ஆனால், அந்த சமயத்தில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதியான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டது. எனவே, வருகிற 9-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிப்படி, வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும். இதற்கென அமைக்கப்பட்ட குழுவை கலைத்துவிட்டு, விவசாயிகளின் பிரதிநிதிகள் அடங்கிய புதிய குழுவை அமைக்க வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ்பெற வேண்டும். அப்பாவி விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்.
போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும். ஜீப் ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன்களுக்கான வட்டியை 50 சதவீதம் குறைக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் மாத ஓய்வூதியம் அளிக்க வேண்டும்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.