நீதிபதிகள் நிர்வாகத்தைக் கவனித்தால், நீதித்துறை பணிகளை யார் பார்ப்பது? மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கேள்வி

“நீதிபதிகள் நிர்வாகத்தைக் கவனித்தால், நீதித்துறை பணிகளை யார் பார்ப்பது? லட்சுமண ரேகையைத் தாண்டக்கூடாது” என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறினார்.

Update: 2023-03-18 16:43 GMT

மோதல் போக்கு

ஐகோர்ட்டு நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் போன்றவற்றில் சுப்ரீம் கோர்ட்டுக்கும், மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வருகிறது.

இதற்கிடையே தேர்தல் கமிஷன் சீர்திருத்தம் தொடர்பாக நடந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிகுமார் ஆகியோரைக் கொண்ட 5 பேர் அரசியல் சாசன அமர்வு விசாரித்து கடந்த 2-ந் தேதி அதிரடி தீர்ப்பை வழங்கியது.

இந்தத் தீர்ப்பில், தலைமை தேர்தல் கமிஷனரையும், தேர்தல் கமிஷனர்களையும் பிரதமர், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகிய 3 பேரைக்கொண்ட குழுவின் ஆலோசனை பேரில் ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையொட்டி நாடாளுமன்றம் சட்டம் இயற்றுகிற வரையில் இந்த தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

மத்திய மந்திரி பதில்

இந்த நிலையில் டெல்லியில் ஆங்கில பத்திரிகை ஒன்றின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பங்கேற்றபோது, அவரிடம் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டியதிருக்கிறது. அதன்படி நியமனங்கள் செய்யப்படும். தற்போது நாடாளுமன்றத்தில் சட்டம் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதில் வெற்றிடம் உள்ளது. நாம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை விமர்சிக்கவில்லை. அதன் பின்விளைவுகள் குறித்தும் பேசவில்லை. இந்த விவகாரத்தில் அரசு என்ன செய்யப்போகிறது என்பது பற்றியும் குறிப்பிடவில்லை.

நீதிபதிகளுக்கு கேள்வி

ஆனால், ஒவ்வொரு முக்கியமான பணி நியமனத்திலும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியோ அல்லது நீதிபதிகளோ உட்கார்ந்தால், நீதித்துறை பணிகளை யார் கவனிப்பதாம்?

நாட்டில் எவ்வளவோ நிர்வாகப்பணிகள் இருக்கின்றன. எனவே, நீதிபதிகள் முதன்மையாக நீதித்துறை பணிகளைச் செய்வதை நாம் பார்க்க வேண்டும். அவர்கள் மக்களுக்கு நீதி வழங்குகிற வகையில் தீர்ப்புகளைச் சொல்ல வேண்டும்.

நீங்கள் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி அல்லது நீதிபதி என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் நிர்வாகச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள் என்கிறபோது, அது கேள்விக்குள்ளாகலாம். அந்த விவகாரம் உங்கள் கோர்ட்டுக்கு விசாரணைக்கு வருகிறது. நீங்கள் ஒரு பகுதியாக இருந்த ஒரு விவகாரத்தில் ஒரு தீர்ப்பை நீங்கள் வழங்க முடியுமா? அப்படிப்பட்ட சூழலில் நீதியின் கொள்கையே சமரசம் செய்யப்படும். அதனால்தான் அரசியலமைப்பில் லட்சுமண ரேகை மிகத் தெளிவாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியலமைப்பில் லட்சுமண ரேகை மிகத்தெளிவாக உள்ளது என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கூறி இருப்பதன் அர்த்தம், அரசு, நீதித்துறை, நாடாளுமன்றம் என்ற மூன்று அமைப்புகளும், அவற்றுக்குரிய எல்லையை (லட்சுமண ரேகையை) தாண்டக்கூடாது என்று எச்சரிப்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்