நீதிபதிகளை நியமிக்கும் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி கருத்தை வெளியிட்டார் மத்திய சட்ட மந்திரி

நீதிபதிகளை நியமிக்கும் விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதி சோதி, சட்டம் இயற்ற சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார்.

Update: 2023-01-22 22:07 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. நீதிபதிகள் அடங்கிய 'கொலீஜியம்' சிபாரிசு செய்தவர்களை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு கூறி வருகிறது.

அதே சமயத்தில், சுப்ரீம் கோர்ட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு ஆகியோர் விமர்சித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், டெல்லி ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ்.சோதியின் பேட்டியை கிரண் ரிஜிஜு தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஆர்.எஸ்.சோதி கூறியிருப்பதாவது:-

அரசியல் சட்டம் புறக்கணிப்பு

சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டுக்கு இல்லை. அரசியல் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு திருத்த முடியுமா? நாடாளுமன்றம்தான் திருத்த முடியும்.

இப்பிரச்சினையில், முதல்முறையாக அரசியல் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு புறந்தள்ளி விட்டது. அத்துடன், ''நீதிபதிகளை நாங்களே நியமிப்போம், இதில் மத்திய அரசுக்கு பங்கு இல்லை'' என்று கூறத்தொடங்கி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

சட்ட மந்திரி கருத்து

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள கிரண் ரிஜிஜு கூறியிருப்பதாவது:-

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இந்த கருத்தில்தான் உள்ளனர். அரசியல் சட்டத்தையும், மக்கள் தீர்ப்பையும் மதிக்காதவர்கள்தான் தாங்கள் அரசியல் சட்டத்தை விட உயர்ந்தவர்கள் என்று கருதுகிறார்கள்.

மக்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் நாட்டை ஆள்கிறார்கள். அவர்களின் பிரதிநிதிகள், சட்டத்தை இயற்றுகிறார்கள். நமது நீதித்துறை சுதந்திரமானது. அரசியல் சட்டமோ முதன்மையானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்