இந்தியா வந்துள்ள கம்போடியா மன்னர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
புதுடெல்லி,
கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி 3 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். கம்போடியா மன்னர் ஒருவர், இந்தியா வருவது கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. கடந்த 1963-ம் ஆண்டு, தற்போதைய மன்னரின் தந்தையான மன்னர் நாரோடம் சிஹானோக் இந்தியா வந்தார்.
நேற்று காலை ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோருடன் கம்போடிய மன்னர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜனாதிபதி மாளிகையில் கம்போடிய மன்னருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார். மன்னருடன் அரண்மனை மந்திரி, செனட் துணைத்தலைவர், வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வந்துள்ளது. இந்தியா, கம்போடியா இடையிலான தூதரக உறவு 70 ஆண்டுகளை எட்டி இருப்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.