மத்தியபிரதேசத்தில் கடத்தப்பட்ட தலித் சிறுமி பிணமாக மீட்பு - கற்பழித்து கொலையா? போலீஸ் விசாரணை
மத்தியபிரதேசத்தில் கடத்தப்பட்ட தலித் சிறுமி பிணமாக மீட்கப்பட்ட நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் குணா மாவட்டம் குவாலியர் டவுன் புறநகர் பகுதியில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். அந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற சிறுமி திரும்பி வரவில்லை. இதனால் பயந்துபோன சிறுமியின் பெற்றோா், போலீசில் புகார் கொடுத்தனர்.
யாரோ மர்மநபர்கள் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த கிராமத்தின் அருகே அந்த சிறுமி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தாள். இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன.
இதனால் சிறுமியை மர்மநபர்கள் கடத்தி கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சிறுமியின் குடும்பத்தினர், கிராம மக்கள் அந்தப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.