கிருஷ்ணகிரி வெடி விபத்துக்கு கியாஸ் சிலிண்டர் காரணம் அல்ல.. நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி விளக்கம்

கிருஷ்ணகிரி வெடி விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி விளக்கம் அளித்தார்.

Update: 2023-08-01 00:06 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை சிலிண்டர் விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி நேற்று பதில் அளித்தார்.இதனைத்தொடர்ந்து தம்பிதுரை அதில், கிருஷ்ணகிரி வெடி விபத்து பற்றி 2 துணைக்கேள்விகளை எழுப்பினார். அதாவது கிருஷ்ணகிரியில் சிலிண்டர் வெடித்து 9 பேர் இறந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து எப்படி நடந்தது? என்பதை மந்திரி விளக்க வேண்டும். சிலிண்டர் பாதுகாப்பு பற்றியும் கூறவேண்டும் என கேட்டார். இதற்கு பதில் தெரிவித்து மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:-

கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் இந்தியன் ஆயில் கழகம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் கேட்டுப் பார்த்துவிட்டோம். குறிப்பிட்ட அந்த பகுதியில் எந்த ஒரு சிலிண்டரும் வினியோகிக்கப்படவில்லை என்றும், அதற்கான வசதிகள் அங்கே இல்லை என்றும் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. எனவே அங்கே விபத்து ஏற்பட்டதற்கு சிலிண்டர் காரணம் அல்ல என நான் கூறுகிறேன்.

விபத்து நடந்த இடத்தின் அடுத்த கட்டிடத்தில் பட்டாசு ஆலை இருந்ததாக தமிழ்நாடு அமைச்சர் கூட சொல்லி இருக்கிறார். அப்படியானால் குடியிருப்பு பகுதியில் பட்டாசு ஆலை அமைந்தது எப்படி? என கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல பட்டாசு ஆலை அனுமதி பெறாமலும் இயங்கியுள்ளது.

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள ஒரு பகுதியில் அனுமதி பெறாமல் பட்டாசு ஆலை இயங்கியது எப்படி? என்றும் இதில் கேள்வி எழுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி உண்மையை கண்டறிவதாகவும், எதிர்காலத்தில் பட்டாசு ஆலைகள் இப்படி அமையாதவாறு பார்க்கப்படும் என்றும் அமைச்சரே சொல்லி இருக்கிறார்.

கியாஸ் சிலிண்டரை பொறுத்தவரை 2014-ம் ஆண்டில் 14 ஆயிரமாக இருந்த இணைப்புகள் தற்போது 33 கோடிகளாக உயர்ந்து இருக்கிறது. கியாஸ் சிலிண்டர்கள் ஒருபோதும் தானாக வெடிக்காது.

ஏதாவது கசிவு ஏற்பட்டு இருக்கலாம். பட்டாசு ஆலை அங்கு அமைந்தது தவறானது.

இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்