கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்றவர்கள் வேலைவாய்ப்புக்கு தகுதி - மத்திய மந்திரி தகவல்
இந்த விதிமுறை இந்தியாவை விளையாட்டில் 'சூப்பர் பவர்' நாடாக மாற்ற உதவும்' என்று மத்திய மந்திரி அனுராக் தாக்குர் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி,
கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு தகுதி படைத்தவர்கள் ஆவார்கள் என மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனுராக் தாக்குர் நேற்று 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்,
'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு, கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு, கேலோ இந்தியா பாரா விளையாட்டு, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டி ஆகியவற்றில் பதக்கம் வென்றவர்கள் திருத்தப்பட்ட தகுதி வரைமுறையின்படி இனிமேல் அரசு வேலைவாய்ப்புக்கு தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
இந்த விதிமுறை திருத்தம் நமது வீரர்களை ஆதரிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளிப்பதுடன், நமது இந்தியாவை விளையாட்டில் 'சூப்பர் பவர்' நாடாக மாற்ற உதவும்' என்று குறிப்பிட்டுள்ளார்