ராகுல் காந்தியை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும்- கார்கேவுக்கு பாஜக வலியுறுத்தல்

சீன ராணுவம் அத்துமீறிய விவகாரம் குறித்த கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.;

Update: 2022-12-17 10:48 GMT

புதுடெல்லி,

அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ராணுவம் அத்துமீறிய விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'சீனா போருக்குத் தயாராகிறது, ஊடுருவலுக்கு அல்ல. அவர்கள் போருக்குத் தயாராகிறார்கள் என்பதை நமது அரசு ஏற்கவில்லை. நமது நிலத்தை சீனா கைப்பற்றியுள்ளது. அவர்கள் வீரர்கள் நமது வீரர்களை அடிக்கிறார்கள். சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது. ஆனால் அதை நமது அரசு புறக்கணித்து மறைத்து வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தாக்குதலுக்கு சீனா தயாராகி வருகிறது. இந்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது' என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டை நிராகரித்த பாஜக செய்தி தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரதோர் 'இது நேருவின் இந்தியா அல்ல, மோடியின் இந்தியா' என பதிலடி கொடுத்தார்.

மேலும் 'சீனாவுடன் நெருக்கம் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கருதுகிறார். இப்போது சீனா என்ன செய்யப் போகிறது? என்று தெரியும் அளவுக்கு அவர் சீனாவுடன் நெருக்கத்தில் உள்ளார். தனது கருத்துகளால் பாதுகாப்பு படையினரின் மன உறுதியை ராகுல் காந்தி குலைக்க முயற்சிக்கிறார்' எனவும் ரதோர் தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது:- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ரிமோட் கண்ட்ரோல் தலைவர் இல்லை என்பது உண்மையாக இருந்தால், காங்கிரஸ் கட்சி நாட்டிற்கு ஆதரவான கட்சியாக இருந்தால், இந்தியாவை இழிவுபடுத்தி, இந்திய வீரர்களின் மன உறுதியை குலைக்கும் கருத்துக்களை தெரிவித்த ராகுல் காந்தியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் மீது நமது ராணுவம் நடத்திய தாக்குதலுக்கான ஆதாரங்களை ராகுல் காந்தி கேட்டதாகக் கூறப்பட்டது. கல்வான் மோதலுக்குப் பிறகு பிரதமரை "சரண்டர் மோடி" என்று அழைத்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கருத்துக்காக நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பால் அவரது பாவம் கழுவப்படாது, ஆனால் அவர் தனது தவறை உணர்ந்துவிட்டார் என்பதை காட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்