டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? - காங்கிரஸ் தலைவர் கார்கே பதில்

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்கவில்லை.

Update: 2023-08-15 11:44 GMT

டெல்லி,

நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

இதனிடையே, செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்கவில்லை.  இந்நிலையில், செங்கோட்டையில் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? என கார்கேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே,

முதலில் எனக்கு கண்ணில் சிறு பிரச்சினை இருந்தது. இரண்டாவது நெறிமுறைப்படி காலை 9.20 மணிக்கு நான் என் வீட்டில் தேசியக்கொடி ஏற்றினேன். அதன் பின் காங்கிரஸ் அலுவலகம் வந்து அங்கும் தேசியக்கொடி ஏற்றினேன். ஆகையால், செங்கோட்டைக்கு என்னால் செல்ல முடியவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் அதிகமாக இருந்தன. பிரதமர் மோடி புறப்படும் முன் யாரும் புறப்பட அனுமதிக்கப்படவில்லை. ஆகையால், செங்கோட்டைக்கு சரியான நேரத்தில் சேர முடியாது என நான் நினைத்தேன். போதிய நேரமின்மையாலும், பாதுகாப்பு காரணங்களாலும் செங்கோட்டைக்கு செல்ல வேண்டாம் என நினைத்தேன்' என்றார். மேலும், அடுத்த ஆண்டு மோடி தேசியக்கொடி ஏற்றுவார்.  அவர் தன் வீட்டில் இருந்தபடி தேசியக்கொடி ஏற்றுவார் என்று கார்கே கூறினார்.

அதேவேளை, செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்காதது குறித்து மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கண்ணில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பிரச்சினையை அவர் பரிசோதிக்க வேண்டும். கண் பிரச்சினை காரணமாக செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் கார்கே பங்கேற்கவில்லை. ஆனால், அவரின் குடும்ப கட்டுப்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் கார்கே பங்கேற்றுள்ளார். செங்கோட்டையில் இருந்தவாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். ஆனால், மல்லிகார்ஜுன கார்கே எங்கிருந்தவாறு உரையாற்றுவார் என எனக்கு தெரியாது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்