பஞ்சாப் முதல்-மந்திரிக்கு காலிஸ்தான் பயங்கரவாதி கொலை மிரட்டல்
குடியரசு தின விழாவின்போது தாக்குதல் நடத்தப்போவதாக குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார்.;
சண்டிகர்,
வெளிநாடுகளில் இருந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் வீடியோக்கள் வெளியிட்டு இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதியும், தடை செய்யப்பட்ட எஸ்.எப்.ஜே. அமைப்பின் தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுன், தற்போது பஞ்சாப் முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதன்படி குடியரசு தின விழா தாக்குதலுக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் தயாராக வேண்டும் என்றும், அன்றைய தினம் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் பஞ்சாப் டி.ஜி.பி.யை கொல்லப்போவதாகவும், குர்பத்வந்த் சிங் மிரட்டல் விடுத்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 19-ந்தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பவர்களை கொல்லப்போவதாக குர்பத்வந்த் சிங் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.