காலிஸ்தான் பயங்கரவாதிகள்-ரவுடி கும்பல் தொடர்பு: 6 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை - ஒருவர் கைது
காலிஸ்தான் பயங்கரவாதிகள்-ரவுடி கும்பல்கள் இடையிலான தொடர்பை கண்டுபிடிக்கும் விதமாக என்.ஐ.ஏ. நேற்று அதிரடி சோதனை நடத்தியது.
புதுடெல்லி,
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் தங்கள் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியா மீது கனடா குற்றம்சாட்டியதால் இரு நாட்டு உறவில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான பிடியை மத்திய அரசு இறுக்கத் தொடங்கியுள்ளது. நிஜ்ஜாரின் நெருங்கிய கூட்டாளியான குர்பத்வந்த் சிங் பன்னுனுக்கு சொந்தமாக பஞ்சாப்பில் உள்ள சொத்துகளை என்.ஐ.ஏ. ஜப்தி செய்தது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் 43 பேர் விவரங்களையும் வெளியிட்டது.
மேலும், காலிஸ்தான் பயங்கரவாதிகள்-ரவுடி கும்பல்கள் இடையிலான தொடர்பை கண்டுபிடிக்கும் விதமாக என்.ஐ.ஏ. நேற்று 6 மாநிலங்களில் 51 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. லாரன்ஸ் பிஷ்னோய், தேவிந்தர் பாம்பிஹா, அர்ஷ் தலா ரவுடி கும்பல் கூட்டாளிகள் தொடர்புடைய 3 வழக்குகள் தொடர்பாக பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது, அர்ஷ தலா கும்பலுக்கு நெருக்கமான ஒருவர் கைது செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரவுடி கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது சிறையில் இருக்கிறார். தாதாவாக இருந்து காலிஸ்தான் பயங்கரவாதியாய் மாறிய அர்ஷ்தீப் சிங் என்ற அர்ஷ் தலா கனடாவில் உள்ளார். அதேநேரம், ரவுடி தேவிந்தர் பாம்பிஹா கடந்த 2016-ம் ஆண்டு பஞ்சாப் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.