பரபரப்பை ஏற்படுத்திய ஞானவாபி மத வழிபாட்டு தல வழக்கில் இன்று தீர்ப்பு

ஞானவாபி இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் இந்து மத கடவுள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது;

Update: 2022-09-12 03:38 GMT

லக்னோ,

உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது.

இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிவில் கோர்ட்டு, ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு ஆய்வு செய்தது. கடந்த மே மாதம் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு பணிகள் நடைபெற்றது.

அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் ஆட்கள் நுழைய வாரணாசி கோர்ட்டு தடை விதித்தது.

ஆனால், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும், ஞானவாபி இஸ்லாமிய மத வழிபாட்டு தல வழக்கை வாரணாசி சிவில் கோர்ட்டில் இருந்து அனுபவம் பெற்ற நீதிபதி உள்ள வாரணாசி மாவட்ட கோர்ட்டிற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஞானவாபி இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் உள்ள இந்து மத கடவுள் சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் தொடர்ந்த வழக்கு விசாரணை வாரணாசி மாவட்ட கோர்ட்டு மூத்த நீதிபதி முன் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, ஞானவாபி இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வீடியோ எடுப்பது, 1947 ஆகஸ்ட் 15 நாடு சுதந்திரம் பெற்றபோது மத வழிபாட்டு தலங்கள் எந்த அந்தஸ்த்து கொண்டுள்ளதோ அதே நிலை நீடிக்க வகை செய்யும் மதவழிபாட்டு தல சட்டம் 1991-க்கு எதிரானது என்று ஞானவாபி மசூதி கமிட்டி கோர்ட்டில் வாதிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் விசாரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஞானவாபி இஸ்லாமிய மத வழிபாட்டு தல வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, ஞானவாபி இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான மசூதி மற்றும் அப்பகுதியை சுற்றி 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்