'பைக் டாக்சி'யில் பயணம் செய்த கேரள இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

கேரளாவை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ‘பைக் டாக்சி’ புக் செய்துள்ளார்.

Update: 2022-11-30 04:32 GMT

பெங்களூரு,

கேரள மாநிலத்தை சேர்ந்த 22 வயதான இளம்பெண் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் எலெக்ட்ரானிக் சிட்டி பிடிஎம் லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிராபிக் டிசைனராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, அந்த இளம்பெண் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர்கள் வீட்டில் கேளிக்கை நிகழ்ச்சியில் மது குடித்துள்ளார். பின்னர், நீலட்ரிநகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல 'பைக் டாக்சி'யில் முன்பதிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து செல்ல பைக் டாக்சி வந்துள்ளது. அந்த பைக்கின் டிரைவராக சகாபுதீன் (வயது 26) என்ற நபர் வந்துள்ளார். அந்த இளம்ப்பெண்ணை பைக்கில் ஏற்றுக்கொண்டு பதிவு செய்த முகவரிக்கு அழைத்து சென்றபோது அவர் மதுபோதையில் இருந்ததை சகாபுதீன் அறிந்துகொண்டார். மதுபோதையில் இருந்த அந்த இளம்பெண் மயக்கநிலைக்கு சென்றுள்ளார்.

பைக் டிரைவர் சகாபுதீன் இளம்பெண்ணை பதிவு செய்த முகவரி அழைத்து சென்றபோது அவர் மயக்க நிலையில் இருந்ததால் அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர் அந்த பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார்.

அங்கு சகாபுதீனின் காதலியும் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் சகாபுதீன் தனது நண்பரான அக்தர் (வயது 24) என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்துள்ளார். அவர் வீட்டிற்கு வந்த நிலையில் சகாபுதீனும் அவரது நண்பர் அக்தரும் சேர்ந்து அந்த கேரள இளம்பெண்ணை மாறி மாறி தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர், காலை விடிந்ததும் மயக்கநிலையில் இருந்து தெளிவடைந்த இளம்பெண் தான் வேறொருவரின் வீட்டில் இருப்பதை உணர்ந்தார். ஆனால், மதுபோதையில் இருந்ததால் உங்களை வீட்டில் விடாமல் இரவு எங்களுடன் உறங்க வைத்து நாங்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டோம் என்று சகாபுதீனும் அவரது காதலியும் சேர்ந்து அந்த இளம்பெண்ணிடம் கூறியுள்ளனர்.

இதை நம்பிய அந்த இளம்பெண் சகாபுதீனின் வீட்டில் இருந்து வெளியேறி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற இளம்பெண்ணுக்கு கடுமையான உடல்வலி, உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உடல்நல பரிசோதனை செய்தார்.

அந்த இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். மேலும், அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 'பைக் டாக்சி' டிரைவர் சகாபுதீன் அவரது நண்பர் அக்தர் மேலும் அந்த குற்றத்திற்கு உதவிய சகாபுதீனின் காதலி உள்பட 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் 'பைக் டாக்சி'யில் பயணம் செய்த கேரள இளம்பெண் பைக் டாக்சி டிரைவர், நண்பரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்