கேரளா: 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை - உடலை குப்பைக்கிடங்கில் வீசிய வெளிமாநில தொழிலாளி
பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியின் உடல் குப்பைக்கிடங்கில் வீசப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவனந்தபுரம்,
பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதி கேரளா மாநிலம் ஆலுவா மாவட்டம் முக்கம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளார்.
இதனிடையே, அந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் இருந்து மாயமானது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுமியை பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான ஆசப் ஆலம் என்ற இளைஞர் அழைத்து செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர்.
விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் மதுபோதையில் இருந்த ஆசப் ஆலமை வெள்ளிக்கிழமை இரவே கைது செய்தனர். ஆனால், ஆசப் ஆலம் மதுபோதையில் இருந்ததால் சிறுமி எங்கே என்பது குறித்து விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேவேளை, போலீசார் சிறுமியை தேடும் பணியை இரவு முழுவதும் மேற்கொண்டனர்.
மதுபோதை தெளிந்ததையடுத்து நேற்று காலை ஆசிப் ஆலமிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக ஆசப் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஆசப் கூறிய தகவலின் அடிப்படையில் ஆலுவா பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு பின்புறம் குப்பைக்கிடங்கில் இருந்து சிறுமியின் உடலை மீட்டனர். 20 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுமி பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியை கடத்திச்சென்ற ஆசப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பின்னர், உடலை குப்பைக்கிடங்கில் வீசியுள்ளார். சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. மேலும், சிறுமியின் தலை மற்றும் பிறப்புறுப்பில் அதிக காயங்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் குற்றவாளி ஆசப் ஆலமும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் சிறுமியின் பெற்றோர் வசிக்கும் பகுதியில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக வந்து குடியேறியதும் தெரியவந்துள்ளது. ஜூஸ் வாங்கித்தருவதாக கூறி அழைத்து சென்ற ஆசப், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உடலை குப்பைக்கிடங்கில் வீசியுள்ளார். பீகாரை சேர்ந்த புலம்பெயர் தம்பதியின் 5 வயது மகளை அதே பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று குப்பைக்கிடங்கில் வீசிய சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.