போதைபொருளுக்கு அடிமையாக்கி 20 மாணவிகளை பலாத்காரம் செய்த 9-ம் வகுப்பு மாணவன் கைது
மாணவன் ஒருவன் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு போதைப்பொருளை கொடுத்து அவர்களை அதற்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெளிமாநிலத்தில் படித்து வந்த 9-ம் வகுப்பு மாணவி புதிதாக சேர்ந்தார். அந்த மாணவியுடன் அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன் நெருங்கி நட்பாக பழகி வந்துள்ளான்.
அந்த மாணவன், மாணவியின் வீட்டுக்கும் அடிக்கடி சென்று மிகக் குறுகிய காலத்திலேயே மாணவியின் பெற்றோரிடம் நற்பெயரையும் சம்பாதித்தான். இதற்கிடையே வெளி மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு வந்திருந்ததாலும், புதிய பள்ளியில் சேர்ந்ததாலும் அந்த மாணவி மனதளவில் சற்று பாதிப்பில் இருந்தார்.
இதை தெரிந்து கொண்ட அந்த மாணவன், மாணவிக்கு போதைப் பொருளை கொடுத்து அதை பயன்படுத்தினால் மனதில் உற்சாகம் பிறக்கும் என்று கூறியுள்ளான். அந்த மாணவியும் போதைப் பொருளை பயன்படுத்த தொடங்கினார்.
நாளடைவில் அந்த மாணவி போதைக்கு அடிமையானார். தினமும் போதைப்பொருள் இல்லாமல் அவரால் தூங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த மாணவன், மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்யத் தொடங்கினான். அதை தனது செல்போனில் பதிவு செய்தும் வைத்துள்ளான். மேலும் அந்த மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியும் வந்துள்ளான்.
இந்தநிலையில் அந்த மாணவியின் செல்போனில் இருந்த பலாத்கார காட்சிகளை மாணவியின் பெற்றோர் தற்செயலாக பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தங்களது மகள் போதைக்கு அடிமையாகி இருப்பதை அறிந்த பெற்றோர் மாணவியை வயநாட்டிலுள்ள போதைப்பொருள் மீட்பு மையத்தில் அனுமதித்தனர். அங்கு 2 வார சிகிச்சைக்குப் பின் அந்த மாணவி உடல்நலம் தேறினார்.
இதன் பின்னர் அந்த மாணவியின் பெற்றோர் கண்ணூர் டவுன் போலீசில் மாணவன் மீது புகார் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அந்த மாணவன் இதே போல் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு போதைப்பொருளை கொடுத்து அவர்களை அதற்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்தனர்.
சிறுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்து நீக்கம் செய்தது. அந்த மாணவனுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.