கேரளாவில் மழைக்கு 3 பேர் பலி; 7-ந் தேதி வரை கனமழை எச்சரிக்கை
கேரளாவில் வருகிற 7-ந் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.
திருவனந்தபுரம்,
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக கேரளாவில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கனமழை கொட்டிவரும் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது. அதன்படி அந்த மாவட்டங்களில் 64 முதல் 115 மி.மீ வரை மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மழை தொடர்வதால் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் பல வீடுகளில் மழைநீர் புகுந்தது. அந்த பகுதிகளை சேர்ந்தவர்களை மீட்கவும், மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.
தொடர் மழை காரணமாக அம்பலப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டூரை சேர்ந்த ஜித்தின் என்ற வாலிபரும், மலப்புரத்தை சேர்ந்த முகமது முகமில் என்ற சிறுவனும் பலியாகினர். அதேபோல சம்பகுளத்தை சேர்ந்த வேலாயுதன் நாயர் என்பவர் குளத்தில் மூழ்கி இறந்தார்.
திருவனந்தபுரத்தில் சோமன் என்பவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். காணாமல்போன அவரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் வருகிற 7-ந் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மலை மற்றும் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.