கேரளா: விழிஞம் துறைமுகத்துக்கு எதிர்ப்பு - 6-வது நாளாக மீனவர்கள் போராட்டம்...!
விழிஞம் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம்,
விழிஞம் பன்னாட்டுத் துறைமுகம் இந்தியாவின் தென்கோடி மாநிலமான கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் அரபிக்கடல் ஓரத்தில் புதியதாக கட்டமைக்கப்பட்டு வரும் துறைமுகம் ஆகும்.
கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் கன்டெய்னர்களை கப்பல்களில் ஏற்றி இறக்குவதற்கான இந்தியாவின் முதலாவது மிகப்பெரும் முனையத்தை அமைக்க அதானி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரூ. 7,525 கோடி மதிப்பிலான இந்தப் பணிகள், கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கின.
இந்நிலையில், அதானி துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16- ந் தேதியில் இருந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் 6-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இந்தப் போராட்டத்தில், லத்தீன் திருச்சபையைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டுள்ளனர். தொடர் போராட்டத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழிஞ்ஞம் துறைமுக கட்டுமானப் பணிகள் தொடங்கியபிறகு, பல ஏக்கர் கடலோரப் பகுதி அரித்து செல்லப்பட்டதாகவும், தங்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்துவதுடன், கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்திற்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அதில் பங்கேற்க போராட்டக்காரர்கள் முன்வரவில்லை என கேரள அரசு தெரிவித்துள்ளது.
போராட்டத்தால் துறைமுக கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வழங்க கோரியும் அம்மாநில தலைமை செயலாளர், உள்துறை அமைச்சகத்துக்கு அதானி குழுமம் கடிதம் எழுதியுள்ளது.