கேரளா: 52 வயது பெண் பாலியல் வன்கொடுமை - அசாம் இளைஞர் கைது

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-12-17 06:05 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆழப்புலா மாவட்டத்தை சேர்ந்த 52 வயது பெண் கடந்த 13ம் தேதி வேலைத்தேடி கொச்சி சென்றுள்ளார். பின்னர், கொச்சியில் இருந்து எர்ணாகுளம் வந்த அப்பெண் சொந்த ஊர் செல்ல ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, ரெயில் நிலையத்திற்கு வழிதெரியாததால் ப்ரிடோஷ் அலி (வயது 32) என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த அலி மலையாளம் நன்கு பேசத்தெரிந்ததால் அவரிடம் உதவி கேட்டுள்ளார்.

இதையடுத்து, அந்த பெண்ணை ரெயில் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி ரெயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு அலி அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை புதருக்குள் தள்ளிய அலி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அப்பெண் படுகாயமடைந்த நிலையில் அலி அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதையடுத்து, அவ்வழியாக வந்த சிலர் அப்பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்த அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அலியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அலியை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்