கேரளா: இஸ்ரோ நடத்திய தேர்வில் ஆள்மாறாட்டம்; 2 பேர் கைது

கேரளாவில் 10 மையங்களில் இஸ்ரோ சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-21 14:28 GMT

திருவனந்தபுரம்,

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாற்ற, தொழில் நுட்ப பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் 10 மையங்களில் நடந்தது.

இந்த தேர்வை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நடத்தியது. இதில், தேர்வு மையங்களில் தேர்வு எழுத வேண்டியவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் கலந்து கொண்ட விவரம் தெரிய வந்து உள்ளது.

அவர்கள், மொபைல் போன் வழியே புகைப்படங்களை எடுத்து, கேள்விகளை வேறொருவருக்கு அனுப்பி, புளூடூத் வழியே பதில்களை பெற்று வந்துள்ளனர். இதுபற்றி அரியானாவில் இருந்து தொலைபேசி வழியே ஒருவர் அதிகாரிக்கு உளவு தகவல் அளித்துள்ளார்.

இதுபோன்று வெவ்வேறு தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் பிடிபட்டனர். உண்மையான நபர்களுக்கு பதிலாக அவர்கள், தேர்வை எழுதியுள்ளனர் என போலீசார் கூறுகின்றனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையும் தீவிரமடைந்தது.

இவர்கள் தவிர, வடமாநில நபர்கள் 4 பேரும் பிடிபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஐ.டி. சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. தேர்வை ரத்து செய்ய வேண்டுமா? இல்லையா? என்பது பற்றி விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் முடிவு செய்யும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் பயிற்சி மையங்கள் மற்றும் பிறருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்