கோவில்களில் காணிக்கையாக பெற்ற 535 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு - கேரள ஐகோர்ட்டு அனுமதி
கோவில்களில் காணிக்கையாக பெறப்பட்ட தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய அனுமதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;
திருவனந்தபுரம்,
கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்பட 1,025 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த சூழலில் கோவில்களில் காணிக்கையாக பெறப்பட்ட தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்ய அனுமதிக்க கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், தேவஸ்தானத்தின் கீழ் உள்ள கோவில்களில் காணிக்கையாக பெறப்பட்ட தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய அனுமதித்து ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. குறிப்பாக எஸ்.பி.ஐ. வங்கியில் தங்கத்தை பணமாக்குதல் திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி காணிக்கையாக பெறப்பட்ட சுமார் 535 கிலோ தங்கத்தை 5 ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தங்கத்தை முதலீடு செய்வதின் மூலம் கிடைக்கும் வட்டி தொகையை தேவஸ்தானத்தின் தனி கணக்கில் வைப்பு நிதியாக வைக்க வேண்டும் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தங்கத்தை முதலீடு செய்வதன் மூலம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி வருமானம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த உத்தரவு மூலம் சபரிமலை உள்பட 16 கோவில் அறைகளில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆபரணங்கள் தங்கக் கட்டிகளாக மாற்றப்பட உள்ளன.