ஸ்வப்னா சுரேஷை மிரட்டிய சாஜ் கிரணுக்கு நோட்டீஸ் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு
இந்த நிலையில் அந்த விவகாரம் தொடர்பாக சாஜ் கிரணிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.
பெரும்பாவூர்
தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷை மிரட்டிய சாஜ் கிரணுக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை, இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டவிரோதமாக கேரளாவுக்கு தங்கம் கடத்தியது தொடர்பான வழக்கில், முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு உள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து முதல்-மந்திரி பினராயி விஜயனின் ஆதரவாளரான சாஜ் கிரண் என்பவர் தன்னை செல்போனில் அழைத்து, தங்க கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தெரிவித்த குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற வேண்டும், அதுகுறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றுக்கூறி மிரட்டியதாக ஸ்வப்னா சுரேஷ், பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
அது தொடர்பாக ஆடியோ பதிவுகளையும் வெளியிட்டார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அந்த விவகாரம் தொடர்பாக சாஜ் கிரணிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று சாஜ் கிரணுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவரிடம், ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், தங்க கடத்தல் வழக்கு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.