மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து விளைவித்த மோடி அரசு - கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சாடல்

மத்திய அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-03-30 12:01 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவின் 20 மக்களவை தொகுதிக்கும் வரும் 26-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கேரளாவில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய கேரள முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன், "மத்திய அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள்.

பல தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் அவர்கள் தொடர்ந்து வாழ முடியுமா என்ற கவலையில் இருக்கிறார்கள். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்துக்கும் ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்ற அடையாளம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா., அம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற சர்வதேச அமைப்புகளும், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளும் இந்தியாவின் சமீபத்திய சில நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளன. இங்கு ஜனநாயக வழிகள் பின்பற்றப்படுகின்றனவா என்று கேள்வியை அவை எழுப்புகின்றன" என்று தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது மற்றும் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது ஆகியவை குறித்து பல நாடுகளும் உலக அமைப்புகளும் சமீபத்தில் இந்தியாவை விமர்சித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்