டெல்லியில் பிரதமர் மோடியுடன் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சந்திப்பு!
புதுடெல்லி வந்துள்ள கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.;
புதுடெல்லி,
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில் கேரள அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இதையடுத்து கேரள அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கேட்டு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முதல்-மந்திரி பினராயி விஜயன் முடிவு செய்தார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு கேரள முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து கடிதம் எழுதப்பட்டது. அதில் கேரள வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க பிரதமரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தரவேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கேரள வனத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் தொலைவுப் பகுதிகள் சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து எடுத்துக் கூறியதாகவும், காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான அதிவேக ரெயில் பாதை திட்டத்திற்கு இன்னும் மத்திய அரசு அனுமதி வழங்காதது குறித்தும் பிரதமரிடம் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
அதோடு, கொரோனா கால செலவினங்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது