மதவாத சக்திகளால் உலக நாடுகளின் முன்பு நம் தேசத்துக்கு தலைகுனிவு; கேரள முதல்-மந்திரி கடும் கண்டனம்!
ஜனநாயக நாடு என்று போற்றப்படும் நமது நாட்டை, உலக நாடுகளின் முன்பு வெட்கப்படும் நிலைக்கு சங்பரிவார் சக்திகள் கொண்டு வந்துள்ளன.
திருவனந்தபுரம்,
நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு, உலகம் முழுவதும் குறிப்பாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து, நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது பாஜக நடவடிக்கை எடுத்தது. பாஜக செய்தித் தொடர்பாளர்கள் பொறுப்பில் இருந்து நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு, கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, "மதச் சார்பற்ற ஜனநாயக நாடு என்று அனைவராலும் போற்றப்படும் நமது நாட்டை, உலக நாடுகளின் முன்பு வெட்கப்படும் நிலைக்கு சங்பரிவார் சக்திகள் கொண்டு வந்துள்ளன.
இனவாத சக்திகளுக்கு எதிராக பொதுமக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.மதவெறி சக்திகளுக்கு எதிராக குரல் எழுப்புங்கள்" என்று பினராயி விஜயன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.