கேரள சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்புசபாநாயகர் நடவடிக்கை

கேரளாவில் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டசபை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-03-22 00:00 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டசபை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கேரள சட்டசபையின் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை வருகிற 30-ந் தேதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தாங்கள் கொண்டு வரும் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன், சபாநாயகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சபை காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

இதில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் 4 எம்.எல்.ஏ.க்கள் காயமடைந்தனர். இதற்கிடையே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் அமளி காரணமாக கடந்த சில நாட்களாக சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் சட்டசபை தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், 'எங்களது கோரிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதால் இன்று (நேற்று) முதல் எதிர்கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் சபையின் நடுவே தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள்' என அறிவித்தார்.

இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிைடயே 5 மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஷம்சீர் அறிவித்தார். இதையடுத்து சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்