வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் வைத்திருந்தசி.டி.ரவி. எம்.எல்.ஏ. உருவப்படம் அடங்கிய காலண்டர்கள், மது பாக்கெட்டுகள் பறிமுதல்

சிக்கமகளூருவில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் வைத்திருந்த சி.டி.ரவி எம்.எல்.ஏ.வின் உருவப்படம் அச்சிடப்பட்ட காலண்டர்கள் மற்றும் மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-03-28 04:30 GMT

சிக்கமகளூரு,-

சிக்கமகளூருவில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் வைத்திருந்த சி.டி.ரவி எம்.எல்.ஏ.வின் உருவப்படம் அச்சிடப்பட்ட காலண்டர்கள் மற்றும் மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சட்டசபை தேர்தல்

கர்நாடகத்தில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார்கள். ேமலும் கட்சியினர் பிரசாரத்திலும் ஈடுபட்டு மக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார்கள். தேர்தலுக்கு முன்பாகவே வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் வழங்குவது அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க கர்நாடக மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் நகை, பணம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 2 லிட்டருக்கு மேல் மதுபானம் மற்றும் ரூ.2 லட்சத்திற்கு மேற்பட்ட ரொக்கத்தை எடுத்து செல்வதற்கு அனுமதி கிடையாது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரில் மதுபானங்கள்

இந்தநிலையில் சிக்கமகளூரு டவுன் கடூர் சாலையில் உள்ள ஏ.ஐ.டி. சர்க்கிளில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும் படியாக கார் ஒன்று நின்று உள்ளது. அப்போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் அந்த காரை திறந்து பார்த்துள்ளனர். அதில் பெட்டி, பெட்டியாக மது பாக்கெட்டுகள் மற்றும் சி.டி.ரவி எம்.எல்.ஏ. உருவப்படம் அச்சிடப்பட்ட காலண்டர்கள் இருந்தன. கார் டிரைவர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து சிக்கமகளூரு டவுன் போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் இருந்த மது பாக்கெட்டுகள், காலண்டர்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

காங்கிரஸ் போராட்டம்

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியினர் அந்தப்பகுதியில் குவிந்தனர். அவர்கள் இதில் தொடர்புைடய நபர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்