குஜராத்துக்கு கெஜ்ரிவால் பயணம்: கருப்பு கொடி காட்டி, திருடன் என கோஷம் எழுப்பிய மக்கள்
குஜராத் பயணத்தின்போது, கெஜ்ரிவாலுக்கு கருப்பு கொடி காட்டி திருடன், திருடன் என கோஷம் எழுப்பப்பட்டது.
நவ்சாரி,
குஜராத்தில் ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதனை எதிர்கொள்வதற்கான பணியில் ஆம் ஆத்மி ஈடுபட்டு வருகிறது.
இதன்படி, நவ்சாரி மாவட்டத்தில் பொது பேரணி ஒன்றில் கலந்து கொள்ள டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் இன்று புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் செல்லும் வழியில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் திரண்டு நின்றனர். அவர்கள் கருப்பு கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தபடியும், மோடி மோடி என கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்.
குத்வெல் மற்றும் கோல்வாத் கிராமங்களுக்கு இடையே சிக்லி தாலுகா வழியே அவர்களின் வாகனங்கள் கடந்து செல்லும்போது, பா.ஜ.க. ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
ஒரு சிலர் திருடன், திருடன் என்று கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர். இதன்பின் அவர்களது வாகனம் தேசிய கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று சேர்ந்தது.
இந்த சம்பவம் பற்றி கெஜ்ரிவால் கூறும்போது, கருப்பு கொடி காட்டியவர்களை தனது சகோதரர்களாக எடுத்து கொள்வேன் என கூறியதுடன், ஒரு நாள் அவர்களின் மனங்களையும் வென்று, தன்னுடைய கட்சியில் அவர்களை இணைய செய்வேன் என கூறியுள்ளார்.