ஊழல் வழக்கில் தொடர்புடைய கெஜ்ரிவாலையும் கைது செய்ய வேண்டும்: காங்கிரஸ் கட்சி

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய கெஜ்ரிவாலையும் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.;

Update: 2023-02-28 17:47 GMT



புதுடெல்லி,


டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.

அவரிடம் 8 மணி நேரத்திற்கு மேல் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் சிசோடியாவை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிசோடியாவை வரும் 4-ந்தேதி வரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால், சிசோடியா தற்போது சி.பி.ஐ. காவலில் உள்ளார்.

இந்நிலையில், சி.பி.ஐ. கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணீஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று மாலை விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

எனினும், சி.பி.ஐ. கைது நடவடிக்கைக்கு எதிரான சிசோடியாவின் மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வு, சட்ட பிரிவு 32-ன் கீழ் மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது என தெரிவித்தது. தொடர்ந்து மனுவை, சிசோடியாவின் வழக்கறிஞர் சிங்வி வாபஸ் பெற்று கொண்டார்.

டெல்லியில் சம்பவம் நடந்திருக்கும்போது, சிசோடியா நேரடியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு வர முடியாது என்றும், அவருக்கான தீர்வுகள், விசாரணை நீதிமன்றம் மற்றும் டெல்லி ஐகோர்ட்டிலேயே உள்ளன என்றும் அமர்வு தெரிவித்து உள்ளது. அதனால், மாற்று தீர்வை காணும்படியும் கேட்டு கொண்டது.

சிசோடியா கைதுக்கு எதிரான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்த நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி முடிவு செய்து உள்ளது. இந்நிலையில், மந்திரி பதவியில் இருந்து சிசோடியா விலகியுள்ளார்.

இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு முன்னாள் மந்திரி மணீஷ் சிசோடியா எழுதியுள்ள பதவி விலகல் கடிதத்தில், உலகில் எந்த சக்தியும் நேர்மையற்ற முறையில் என்னை பணியாற்றும்படி செய்து விட முடியாது. நேர்மையாக 8 ஆண்டுகளாக பணியாற்றிய பின்னர் என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசம் என அவர் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சிசோடியா கைது பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மேகன் இன்று கூறும்போது, உண்மைகள் தெளிவாக தெரிகின்ற இந்த ஊழல் வழக்கில் சிசோடியா கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்குடன் உள்ள தொடர்புக்காக கெஜ்ரிவாலையும் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

டெல்லியில் மிக பெரிய ஊழல் நடந்து உள்ளது. மணீஷ் சிசோடியா மீது இரக்கப்படுபவர்கள், இது ஊழல் விவகாரம் என அறிந்து கொள்ள வேண்டும். அதன்படியே, அதனை பார்க்க வேண்டி உள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட சாராய அதிபர்களில் ஒருவர் கூறும்போது, கெஜ்ரிவாலுடன் பேச வேண்டியிருந்தது என கூறினார் என குற்றப்பத்திரிகைகளில் ஒன்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது, தற்போது தெரிய வந்து உள்ளது. 2 தலைவர்களும் ஊழலில் ஆழ்ந்த தொடர்பு கொண்டு உள்ளனர். அதற்கேற்ப விசாரணை நடத்தப்பட வேண்டும் என அஜய் மேகன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்