வரலாறு காணாத மழை: சுப்ரீம் கோர்ட்டை சூழ்ந்த வெள்ளம் - ராணுவத்தின் உதவியை நாடிய அரவிந்த் கெஜ்ரிவால்...!
டெல்லியில் பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து இந்திய ராணுவத்தினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி,
டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழை காரணமாக தலைநகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். யமுனை நதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் தலைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திரபிரஸ்தா பேருந்து நிலையம் மற்றும் வடிகால் எண் 12 இல் உள்ள உலக சுகாதார அமைப்பின் கட்டிடம் அருகே உள்ள ரெகுலேட்டர் சேதமடைந்துள்ளதால் யமுனை நதி நீர் மிக வேகமாக நகருக்குள் நுழைந்து வருகிறது. இதனால் தலைநகரின் செங்கோட்டை, சுப்ரீம் கோர்ட் போன்ற முக்கிய இடங்கள் அமைந்துள்ள பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட் அருகில் உள்ள மதுரா சாலை மற்றும் பகவான் தாஸ் சாலையின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நடைபெறும் மீட்பு பணிகளின் பொது பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தின் உதவியை நாடுமாறு தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.