குஜராத்துக்கு வந்த கெஜ்ரிவால்; வரவேற்பில் மோடி மோடி என்ற கோஷங்களால் பரபரப்பு
குஜராத்தில் உள்ள வதோதரா விமான நிலையத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வந்திறங்கியபோது, மோடி மோடி என்ற கோஷங்களுடன் அவர் வரவேற்கப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.;
வதோதரா,
டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரசார பணிகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இதற்காக, அவர் வதோதரா நகரில் உள்ள விமான நிலையத்தில் இன்று வந்திறங்கினார். அவரை வரவேற்க தொண்டர்கள் காத்திருந்தனர். எனினும், குஜராத்துக்கு வந்த கெஜ்ரிவாலை வரவேற்கும் வகையில் எழுந்த வாழ்த்து கோஷத்தில் மோடி மோடி என்ற குரல் முதலில் எழுப்பப்பட்டது.
அதன்பின்னர் கெஜ்ரிவால் கெஜ்ரிவால் என்ற கோஷங்களும் முழங்கின. தனது அரசியல் எதிரி மற்றும் பிரதமர் மோடியின் பெயரை உச்சரித்து வரவேற்றபோதும், கெஜ்ரிவால் புன்னகையுடன் கடந்து பத்திரிகையாளர்களை நோக்கி சென்றார்.
எனினும், அந்த பகுதியில் அவர் எதுவும் பேசவில்லை. பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேச இருக்கிறார்.
அவர், வதோதரா நகரில் இன்று கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த சம்பவம் பற்றி பா.ஜ.க.வை சேர்ந்த பிரீத்தி காந்தி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், மோடியின் குஜராத்தில், கெஜ்ரிவாலுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.