விசா விவகாரம்: கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றார்- அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

பஞ்சாபில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க, சீனப் பணியாளர்களுக்கான விசாவை மீண்டும் பயன்படுத்தும் விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.;

Update: 2024-03-21 15:01 GMT

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் மான்ஸா என்ற இடத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது 1,980 மெகாவாட் திறனுடைய மின்திட்டமாகும். சீனாவின் ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக் ஷன் கார்ப் என்ற நிறுவனம் இந்த நிறுவனத்துக்கான ஒப்பந்த பணிகளை மேற்கொண்டது.

இதற்காக 260 சீனர்களுக்கு விசா வழங்கப்பட்டது. 260 சீனர்களுக்கு விசா வழங்க காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ரூ50 லட்சம் லஞ்சமாக பெற்றார் என சிபிஐ வழக்கு தொடர்ந்தது. 2011-ல் கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது சீனர்களுக்கு விசா வழங்க ரூ50 லட்சம் பெற்றார் என சிபிஐ குற்றம் சாட்டியது.

சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட இந்த வழக்கின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் பெற்றார்.

சிபிஐ வழக்கின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், சீனப் பணியாளர்களுக்கான விசாவை மீண்டும் பயன்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறுவதற்காக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நெருங்கிய உதவியாளர் மூலம் ரூ.50 லட்சம் லஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், முதலீடு செய்யப்பட்ட ரூ. 50 லட்சத்தின் மதிப்பு குறிப்பிட்ட காலகட்டத்துக்குளு் ரூ.1.59 கோடியாக அதிகரித்துள்ளது. பண பரிமாற்றத் தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) விதிகளின்படி குற்றத்தின் வருமானம் ஆகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்