ஒட்டுமொத்த நாட்டிற்கே மாதிரியாக திகழ்கிறது, கர்நாடகத்தின் ஆட்சி நிர்வாகம்- பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி சித்தராமையா பதில்

உத்தரவாத திட்டங்களால் கர்நாடகத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி இல்லை என்று விமர்சித்த பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி சித்தராமையா பதில் அளித்துள்ளார். அவர் கர்நாடகத்தின் ஆட்சி நிர்வாகம் ஒட்டுமொத்த நாட்டிற்கே மாதிரியாக திகழ்வதாக கூறியுள்ளார்.

Update: 2023-08-02 21:26 GMT

பெங்களூரு:-

முதல்-மந்திரி சித்தராமையா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உங்களின் நிலைப்பாடு

கர்நாடகத்தில் உத்தரவாத திட்டங்களால் வளர்ச்சி பணிகளுக்கு நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது மோடியின் தனிப்பட்ட கருத்தா? அல்லது பிரதமரின் கருத்தா? அல்லது பா.ஜனதாவின் கருத்தா? என்பதை அவர் விளக்க வேண்டும். உத்தரவாத திட்டங்களை எதிர்ப்பதாக இருந்தால் உங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த திட்டங்களை கர்நாடக பா.ஜனதாவினரும் எதிர்க்க வேண்டும் என்று நீங்கள் (மோடி) உத்தரவிடுங்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உத்தரவாத திட்டங்களை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். நீங்கள் அதற்கு தயாரா? என்பதை அறிவித்துவிடுங்கள்.

குடும்ப தலைவிகள்

கால் கிலோ அரிசி குறைந்தாலும் போராட்டம் நடத்துவதாக எடியூரப்பா அடிக்கடி சொல்கிறார். இதுகுறித்து உங்களின் கருத்து என்ன?. யுகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது ஆண்டுக்கு 3 சமையல் கியாஸ் சிலிண்டர், ஏழை குடும்பங்களுக்கு தினமும் அரை லிட்டர் பால் வழங்குவதாக பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறியதே. இது இலவச திட்டங்கள் இல்லையா?.

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய பிரதேசத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குமாறு அம்மாநில முதல்-மந்திரி அறிவித்துள்ளாரே. இதை ரூ.3 ஆயிரமாக உயர்த்துவதாக அவர் உறுதி அளித்துள்ளார். இது இலவசம் இல்லையா?. கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரத்தை மத்திய அரசு வழங்குகிறதே. இதுகுறித்து உங்களின் கருத்து என்ன?.

இலவச திட்டங்கள்

நாங்கள் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கினால் அரசு கஜானா காலியாகிவிடும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். பிரதமா் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு தலா 5 கிலோ அரிசியை மத்திய அரசு வழங்குகிறதே, அதை என்னவென்று சொல்வீர்கள்?. இலவச அடிப்படையில் மத்திய அரசு 8 திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதற்கு ஆண்டுக்கு ரூ.1¼ லட்சம் கோடி செலவழிக்கிறது.

இலவச திட்டங்களை எதிர்க்கும் பிரதமர் மோடி, இந்த திட்டங்களை எப்படி நியாயப்படுத்த போகிறீர்கள்?. இரட்டை என்ஜின் அரசின் மக்கள் விரோத செயல்களால் விரக்தி அடைந்த மக்கள் எங்களின் உத்தரவாத திட்டங்களை கண்டு காங்கிரசை ஆதரித்து வெற்றி பெற வைத்துள்ளனர். நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம்.

மக்கள் கடும் நெருக்கடி

விலைவாசி உயர்வு, வேலையின்மையால் மக்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். மக்களை பொருளாதார சுமையில் இருந்து மீட்கவும், சமூக பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒட்டுமொத்த நாட்டிற்கே கர்நாடக மாதிரி ஆட்சி நிர்வாகம் அவசியம். தற்போதைய சூழ்நிலையில் நாட்டிற்கே கர்நாடக ஆட்சி நிர்வாகம், மாதிரியாக திகழ்கிறது.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்