நடப்பு ஆண்டில் கர்நாடகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

நடப்பு ஆண்டில் கர்நாடகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2023-03-14 18:45 GMT

பெங்களூரு:

இடைத்தரகர்கள் தலையீடு

மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களின் பயனாளிகளின் மாநாடு கொப்பலில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களின் மானியங்களை பயனாளிகளுக்கு இடைத்தரகர்கள் தலையீடு இன்றி அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கிறது. கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் இதுவரை கர்நாடகத்தில் 53.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் கொப்பல் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.456 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை

விவசாயிகளுக்கு யசஸ்வினி பெயரில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பிரீமிய தொகை ரூ.180 கோடியை அரசே ஏற்றுக்கொள்ளும். விவசாய வித்யா நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாட்டில் வேளாண்துறை வளர்ந்துள்ளது. ஆனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையவில்லை.

விவசாயத்திற்கான வட்டியில்லா கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் உரம், விதைகள் வாங்கி தலா ரூ.10 ஆயிரம் மானியம் வழங்குகிறோம். நடப்பு ஆண்டில் நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதமாக இருக்கும் வேளையில் கர்நாடகத்தின் மொத்த உற்பத்தி 9 சதவீதமாக உள்ளது. கர்நாடகத்தின் தலா வருமானம் ரூ.3.47 லட்சமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு சமூகநீதி வெறும் பேச்சில் மட்டுமே இருந்தது. ஆனால் நாங்கள் அதை செயல்பாட்டில் காட்டியுள்ளோம். அதாவது தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்