வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி: வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்
வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய இளம்பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாவேரி,
கர்நாடக மாநிலம் , ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா அரேமல்லாபுரா கிராமத்தை சேர்ந்தவர் அனுமவ்வா (வயது 50). இவரது மகன் மஞ்சுநாத். இவரும், அதே கிராமத்தில் வேறு சாதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்துள்ளனர். பின்னர் அந்த இளம்பெண்ணுடன் மஞ்சுநாத் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதுபற்றி இளம்பெண்ணின் தந்தை சந்திரப்பாவுக்கு தெரியவந்தது.
உடனே அவர் மற்றும் உறவினர்கள் அனுமவ்வாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர். அத்துடன் அனுமவ்வாவை பிடித்து தாக்கியுள்ளனர். பின்னர் கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் அனுமவ்வாவை கட்டி வைத்து சந்திரப்பா உள்பட 3 பேர் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இதில், அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தாலுகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனுமவ்வா சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், வேறு சாதியை சேர்ந்த வாலிபருடன் இளம்பெண் ஓடியதால், வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் ராணிபென்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அனுமவ்வாவை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவியது. இதையடுத்து, ராணிபென்னூர் போலீஸ் நிலையத்தில் அனுமவ்வாவின் குடும்பத்தினர் சந்திரப்பா உள்ளிட்டோர் மீது புகார் அளித்தார்கள். அதுபோல், சந்திரப்பாவும் தனது மகளை மஞ்சுநாத் கடத்தி சென்று விட்டதாக மற்றொரு புகார் அளித்தார்.
அந்த புகார்களின் பேரில் ராணிபென்னூர் போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அனுமவ்வாவை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு அஞ்சுகுமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து, அனுமவ்வாவை தாக்கியதாக சந்திரப்பா, அவரது உறவினர்கள் கங்கப்பா மற்றும் குத்தேவ்வா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே பெலகாவியில் கடந்த ஆண்டு காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடிய விவகாரத்தில் வாலிபரின் தாயை இளம்பெண்ணின் குடும்பத்தினர் நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.