கர்நாடகா: கனமழைக்கு இளம்பெண் பலி; பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட முதல்-மந்திரி சித்தராமையா
கர்நாடகாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சென்று பார்வையிட்டார்.;
பெங்களூரு,
கர்நாடகாவில் சமீபத்திய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதல்-மந்திரியாக சித்தராமையா முறைப்படி நேற்று பொறுப்பேற்று கொண்டார். துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் பதவியேற்று கொண்டார்.
இந்த நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இன்று திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. இதில், பலத்த காற்றும் வீசியதில், மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை நீர் வடிவதற்கு வழியின்றி சாலை முழுவதும் வெள்ளநீர் தேங்கி காணப்பட்டது.
இதனால், நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. சில இடங்களில் பொதுமக்கள் வெள்ள நீரில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பெங்களூருவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி சித்தராமையா இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அரசு அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்டோரும் சென்றனர்.
இதில், கனமழையால் கே.ஆர். சர்க்கிள் பகுதியில் சுரங்க பாதையில் 23 வயது இளம்பெண் ஒருவர் சிக்கி கொண்டார். அவர் மழை நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா இரங்கல் தெரிவித்து கொண்டார். இதேபோன்று, கனமழையால் வீடு ஒன்றும் அடியோடு இடிந்து விழுந்தது. எனினும், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.