கர்நாடகத்தில் அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை
பெங்களூரு உள்பட 20 இடங்களில் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள். வருமானத்திற்கு அதிகமாக அதிகாரிகள் சொத்துகள் குவித்திருப்பது அம்பலமாகி உள்ளது.
20 இடங்களில் நடந்தது
கர்நாடகத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தி அதிர்ச்சி கொடுப்பது வழக்கம். இந்த நிலையில், மாநிலத்தில் சில அரசு அதிகாரிகளின் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பது குறித்து லோக் அயுக்தா போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து, அந்த அதிகாரிகள் குறித்த தகவல்களை போலீசார் திரட்டி வந்தனர்.
இந்த நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 7 அரசு அதிகாரிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். பெங்களூரு, தாவணகெரே, கோலார், பல்லாரி, பீதர், சிவமொக்கா, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் ஒட்டு மொத்தமாக அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 20 இடங்களில் லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.
ரூ.80 லட்சம் ரொக்கம் சிக்கியது
பெங்களூரு மாநகராட்சியில் நகர திட்டமிடுதல் துறையில் என்ஜினீயராக இருந்து வருபவர் கங்காதரய்யா. இவருக்கு சொந்தமான பெங்களூரு எலகங்கா, மகாலட்சுமி லே-அவுட்டில் உள்ள வீடுகளில் நேற்று அதிகாலையிலேயே லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள். லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையிலான போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர். அவரது வீட்டில் இருந்த ஆவணங்கள், சொத்து பத்திரங்களை கைப்பற்றி ஆய்வு செய்தார்கள்.
மேலும் கங்காதரய்யா வீட்டில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்கம், வெளிநாட்டு பணம் இருந்ததையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள். அதாவது ரூ.80 லட்சம் ரொக்கம், ரூ.50 லட்சத்திற்கு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதுதவிர அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். அவர் தனது குடும்பத்தினர் பெயரில் சொத்துகளை வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
கோலாரில் சோதனை
இதுபோன்று, பெங்களூரு மாநகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றும் அனுமந்தய்யாவுக்கு சொந்தமான வீடு, சித்ரதுர்காவில் உள்ள அவரது பண்ணை வீட்டிலும், இதுபால், ஒலல்கெரே தாசில்தார் நாகராஜிக்கு சொந்தமான சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்திலும் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள்.
கோலார் மாவட்டத்தில் தாலுகா பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியாக இருந்து வந்தவர் வெங்கடேசப்பா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார். அதிகாரி வெங்கடேசப்பாவுக்கு சொந்தமான கோலார் மாவட்டம் பங்காருப்பேட்டை, முல்பாகலில் உள்ள வீடு, அலுவலகம் என 5 இடங்களில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள்.
முக்கிய ஆவணங்கள் சிக்கியது
மேலும் தாவணகெரே மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான நாகராஜ் வீடு, அவரது உறவினர் வீட்டிலும், பீதர் மாவட்டம் பசவகல்யாண் அருகே முடபி துணை தாசில்தார் விஜயகுமார், பல்லாரி மாவட்டத்தில் மின்வாரிய என்ஜினீயராக பணியாற்றும் உசேன் ஷாப், பீதரில் நீர்ப்பானத்துறை உதவி என்ஜினீயர் சுரேஷ் மேதா ஆகிய அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகளிலும் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது அதிகாரிகளின் வீடுகளில் இருந்து பணம், நகைகள், வெள்ளி பொருட்கள் சொத்து பத்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் போலீசாருக்கு கிடைத்திருந்தது. அவற்றை கைப்பற்றி லோக் அயுக்தா போலீசார் எடுத்து சென்றார்கள்.
வருமானத்திற்கு அதிகமாக...
சோதனைக்கு உள்ளான 7 அதிகாரிகளும் தங்களது வருமானத்தை காட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துகள் குவித்து வைத்திருப்பதாக லோக் அயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களது சொத்துகள் மற்றும் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை தொடர்பாக 7 அரசு அதிகாரிகள் மீதும் லோக் அயுக்தா போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அதிகாரிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.