காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் சட்ட போராட்டத்துக்கு கர்நாடகம் தயார்: துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவிப்பு

காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் சட்ட போராட்டத்துக்கு கர்நாடக அரசு தயாராக உள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.;

Update: 2023-10-01 21:35 GMT

பெங்களூரு:

கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டிலும், காவிரி மேலாண்மை ஆணையத்திலும் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

இதுபற்றி துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காவிரி விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள், சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினோம். அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். காவிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் நல்ல மழை பெய்யட்டும் என்று நாம் வேண்டிக்கொள்வோம்.

விவசாயிகளின் பயிர்கள் கருகாமல் இருக்க தேவையான நீரை திறந்து விட்டுள்ளோம். நாங்கள் தமிழகத்திற்கு கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணையில் இருந்து நீர் திறக்கவில்லை. ஆனால் காவிரி படுகையில் பெய்த மழை காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அதனால் நமக்கு எந்த அளவுக்கு மழை வருகிறதோ அந்த அளவுக்கு நமக்கு சக்தி கிடைக்கிறது.

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் சட்ட போராட்டத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம். சாமனூர் சிவசங்கரப்பா ஒரு சமூகத்தின் தலைவர். தனது சமூகத்திற்கு எந்த அளவுக்கு பிரதிநித்துவம் கிடைத்துள்ளது என்பது அவருக்கு தெரியும். அதிகாரிகள் இயல்பாக தங்களுக்கு நல்ல பதவி வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அரசால், சாதி அடிப்படையில் பதவி வழங்க முடியாது.

அனைவரையும் கவுரவிக்க வேண்டும். முதல்-மந்திரி சித்தராமையா அனைத்து தரப்பினரையும் சமமாக பார்க்கிறார். அதற்கான பொறுப்பு அவருக்கு உள்ளது. மந்திரிகளுக்கு இதுகுறித்து தெரிய வேண்டும். நாங்கள் சமூக நீதிக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அரசு என்றால் எல்லாவற்றையும் முதல்-மந்திரி மீது போடக்கூடாது. மந்திரிகளும் அவற்றுக்கு பொறுப்பேற்று நடந்து கொள்ள வேண்டும்.

அனைவரின் காலத்திலும் இது நடந்து வந்துள்ளது. சாமனூர் சிவசங்கரப்பா கேட்பதில் ஒன்றும் தவறு இல்லை. பா.ஜனதாவினர் ஆபரேஷன் தாமரை குறித்து பேச வேண்டும். நாங்கள் யாரையும் எங்கள் கட்சிக்கு வரும்படி இழுக்கவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்