'குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மனைவியிடம் கணவர் பேசுவது கொடுமை அல்ல'; கர்நாடக ஐகோர்ட்டு கருத்து
‘குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மனைவியிடம் கணவர் பேசுவது கொடுமைப்படுத்துவது ஆகாது’ என்று கர்நாடக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
'குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மனைவியிடம் கணவர் பேசுவது கொடுமைப்படுத்துவது ஆகாது' என்று கர்நாடக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
சிறை தண்டனை
பெங்களூருவை சேர்ந்த டாக்டர் சசிதர் சுப்பண்ணா, அவரது மனைவி மற்றும் அவரது தாயார் அமெரிக்காவில் வசித்து வந்தனர். அங்கு தன்னை கணவரும், மாமியாரும் கொடுமைப்படுத்தியதாக பெங்களூரு போலீசில் புகார் செய்தார். அதாவது தனது கணவர் மேற்கொண்டு படித்து அமெரிக்காவில் வேலை தேட வேண்டும் என்றும், தமிழ் மொழியை கற்க வேண்டும் என்றும், குழந்தை பெற்று கொள்வது குறித்தும் பேசி அழுத்தம் கொடுத்ததாக கூறினார். இதுகுறித்து பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அதில் கணவருக்கு ஓராண்டும், மாமியாருக்கு 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மகன்-தாய் பெங்களூரு செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த செசன்சு கோர்ட்டு, கீழ்கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை உறுதி செய்து கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து அவர்கள் 2 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பிரபாகர் சாஸ்திரி விசாரணை நடத்தினார். இதில் கீழ் கோா்ட்டு வழங்கிய தண்டனையை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
கொடுமைப்படுத்துவது ஆகாது
நீதிபதி தனது தீர்ப்பில், "குழந்தை பெற்று கொள்வது குறித்து மனைவியிடம் கணவர் பேசுவது கொடுமைப்படுத்துவது ஆகாது. மேலும் தமிழ் மொழியை கற்கும்படி வற்புறுத்தியதாக புகார்தாரர் கூறியுள்ளார். குடும்பத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு தங்களுக்கு உகந்த மொழியை கற்குமாறு கூறுவது தவறு இல்லை. மேலும் கணவருடன் சேர்ந்து விளையாடுமாறு கூறியதும் தவறு இல்லை" என்று கூறியுள்ளார்.