கர்நாடக சட்டசபையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-22 23:51 GMT

கோப்புப்படம் 

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் உள்பட மந்திரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்', 'நீட் தேர்வு விவகாரம்', 'நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வது' உள்பட 17 விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் நீட் தேர்வு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதிகள் மறுவரையறை ஆகிய 3 விஷயங்களுக்கு எதிராகவும் சட்டசபை தீர்மானம் நிறைவேற்ற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனைத்து மந்திரிகளும் ஒப்புதல் வழங்கினர்.

இதையடுத்து இந்த 3 தீர்மானங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டசபையில் அந்த தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 'கிரேட்டர் பெங்களூரு ஆளுமை சட்டம்-2024'-க்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் முதன்மை செயலாளர் பி.எஸ்.பட்டீல் தலைமையில் 4 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு, பெங்களூரு மாநகராட்சியில் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்று கூறி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடக அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.

அதில் 'கிரேட்டர் பெங்களூரு ஆணையம்'(ஜி.பி.ஏ.) உருவாக்கப்பட வேண்டும், அதன்மூலம் பெங்களூருவுக்கு உள்கட்டமைப்பு, வளர்ச்சி மற்றும் நிதி அதிகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் பெங்களூரு மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கையை 400 வார்டுகளாக அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தற்போது 'கிரேட்டர் பெங்களூரு ஆளுமை சட்டம்-2024'-க்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்